தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ?

ஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் ?

webteam

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனக் கூறி மக்களின் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையும் முழுமையாக மூடப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. திடீரென ஆலையில் சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு என்றதும் பதறியது மாவட்ட நிர்வாகம். ஏறக்குறைய 3000 லிட்டர் சல்ஃபியூரிக் ஆசிட் அகற்றப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை நம்பியிருந்த துணைத் தொழில்களை யாரும் கவனிக்கவில்லை. 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், காப்பரின் உப பொருட்கள் ஆகியவற்றை நம்பி சிமெண்ட் தயாரிப்பு, உரத்தயாரிப்பு, பேட்டரி தயாரிப்பு, சிராய்ப்பு (Abrasive) பட்டை தயாரிப்பு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் நிலைக்கு ஆளாகியுள்ளன. ஸ்டெர்லைட்டை மூடினால் இவையெல்லாம் ஏன் மூடப்படுகிறது ?, ஸ்டெர்லைட்டை திறக்க வைக்க இப்படி ஒரு ஏமாற்றும் வேலையா ? என கேட்கலாம். கண்டிப்பாக இல்லை. ஸ்டெர்லைட் இல்லாவிட்டால் இவையெல்லாம் பாதிக்கப்படும் என ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை அல்லது போதுமான தயாரிப்பை தொடங்கவில்லை என்பதே கேள்வி.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்கும் முன்பே ஆலையில் இருந்து வெளியாகும் சல்ஃபியூரிக் அமிலத்தை உரம், சிமெண்ட் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. கழிவுதானே என ஆலையும் ஒத்துக் கொண்டது. ஆனால் தேவையை விட, வெளியாகும் கழிவு சல்ஃபியூரிக் அமிலம் அதிகம் என்பதே உண்மை. இதனால் அமிலம் சேமித்தும் கூட வைக்கப்பட்டு பின்னர் கொடுக்கப்பட்டது. இதே போல்தான் காப்பரில் இருந்து வீணாகும் கழிவில் செய்யப்படும் சிராய்ப்பு பட்டை. அதே போல் வேதியியல் தொழிற்சாலைகள். 4000 ரூபாய்க்கு கிடைத்து வந்த சல்ஃபியூரிக் அமிலத்தின் விலை இப்போது 14 ஆயிரம் ஆக மாறிவிட்டது. அதே போல் சிமெண்ட் ஆலையில் பயன்படுத்தப்படும் ஜிப்ஷத்தின் விலையும் உயர்ந்து விட்டது.

பல்வேறு பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுவது சூப்பர் பாஸ்பேட். இதனை தயாரிக்க மூலப் பொருளாக இருக்கும் அமிலம் மற்றும் பாஸ்பேட் இரண்டும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கிடைத்து வந்தது. தமிழகத்தில் உள்ள உரத்தொழிற்சாலைகளில் 50 % தேவையினை ஸ்டெர்லைட் ஆலைமூலம் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இப்போது முழுமையாக மற்ற மாநிலத்தில் இறக்குமதி செய்யும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. அதே போல் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள். இதற்கான மூலப் பொருட்களும் ஸ்ட்ர்லைட் மூலமே கிடைத்து வந்த நிலையில் அதற்கும் தட்டுப்பாடாகி ஆலைகள் மூடு விழா காண்கின்றன. இதே போல் பாஸ்பரிக் அமிலமும் கிடைக்காததால் பாஸ்பேட் தயாரிக்க முடியாமல் திணற வேண்டிய நிலை. 

சிறு, குறு தொழில்கள் காணாமல் போவது ஒன்றும் நமக்கு புதிதில்லை என்றாலும், ஸ்டெர்லைட்டை நம்பி இருந்த நிறுவனங்கள் என்ன, அவற்றின் தேவை என்ன, அவையெல்லாம் எங்கு கிடைக்கும், எப்படி குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது என தமிழக அரசு யோசிக்க வேண்டும். அவ்வாறு உரிய ஆய்வுகளை மேற்கொள்வதோடு காப்பர் தயாரிப்பு நிறுவனங்களை அணுகி தமிழகத்தின் தேவையை எடுத்துக் கூறி அரசே கூட குறிப்பிட்ட இலாபத்திற்கு பெற்று அதனை துணைத் தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு விற்கலாம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், இலாபம் பெறவும் வழிவகை செய்யலாம். இல்லையெனில் அவற்றை நம்பியிருக்கும் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரும்.