தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? புதிய தலைமுறை வெயிட்ட எஃப்.ஐ.ஆர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி கொடுத்தது யார்? புதிய தலைமுறை வெயிட்ட எஃப்.ஐ.ஆர்

webteam

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. 144 தடை உத்தரவு போடப்பட்டும், போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். உரிய அனுமதி பெறாமல் போராடுவதால், கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தடுத்தனர். அப்போது காவல்துறையினர் சார்பில் தடியடி நடத்தப்பட, நிலவரம் கலவரம் ஆனது. போராட்டக்காரர்களும் தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மீது கல்வீசியும், வாகனங்களை அடித்து நொறுக்கினர். சில இடங்களில் அரசு மற்றும் காவல்துறை வாகனங்கள் தீக்கு இரையாகின. 

இதையடுத்து போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் சார்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடியின் திரேஸ்புரம் பகுதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். அடுத்த நாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதுதவிர பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு தமிழகம் முழுவதும் கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டது. அடிப்படை முறைப்படி செயல்படாமல் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பலரும் குற்றம்சாட்டினர். 

முதலில் கண்ணீர் புகை குண்டு வீச வேண்டும், அடுத்து தண்ணீர் அடித்து கலைக்க வேண்டும், அதைத்தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் கலைந்து போகவில்லை என்றால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என அறிவிக்க வேண்டும். பின்னர் வானத்தை நோக்கி மூன்று முறை சுட வேண்டும். அதன்பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தினாலும், இடுப்புக்கீழ்தான் சுட வேண்டும். ஆனால் இதில் எதையுமே காவல்துறை கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் சுடுவதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்றும் கேள்விகள் எழும்பின.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம் மற்றும் திரேஸ்புரம் காவல்நிலையம் சார்பாக, தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண் 3 அவர்களுக்கு முதல் தகவல் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் சிப்காட் காவல்நிலையத்தின் முதல் தகவல் அறிக்கைப்படி, துணை வட்டாட்சியர் சேகர் அளித்துள்ள தகவலில், “144 தடை உத்தரவையும் மீறி நாம் தமிழர், மக்கள் அதிகராம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுச்சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வாகனங்களை அடித்து நொறுக்கியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். சட்டவிரோதமாக கூடி வன்முறை செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. கலைந்து செல்லாவிடில் துப்பாக்கியால் சுட நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டது. எச்சரிக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போதும் கலவரக்கும்பல் கலைந்து செல்ல வில்லை. இனியும் பொறுமையாக இருந்தால் மாவட்ட ஆட்சியர் ஊழியர்களுக்கும், பொதுச்சொத்துக்களும் சேதம் ஏற்படும் என துப்பாக்கியை பிரயோகித்து கலவரக் கும்பலை கலைக்க உத்தரவிட்டேன். துப்பாக்கி சூட்டில் காயடைந்த 2 பேரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். 

இதேபோன்று திரேஸ்புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், தகவல்கள் தெரிவித்துள்ள தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், “மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் காவல்துறையினரால் கலைக்கப்பட்ட வன்முறையாளர்கள், காவல்துறையினரை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வடக்கு பீச் ரோட்டில் அமைந்துள்ள காவலர் குடியிருப்புக்கள் அத்துமீறி நுழைந்தனர். அவ்வாறு நுழைந்த 400 ஆண்கள் மற்றும் 100 பெண்களும் கையில் அரிவாள், பெட்ரோல் பாம் போன்ற ஆயுங்களுடன் காவல்துறையினருக்கு காயங்களை ஏற்படுத்தினர். அவர்களை ஒலிபெருக்கியால் கலைந்து போக காவலர்கள் கூறினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வந்த காவலர்கள் அவர்களை தடுத்தனர். எச்சரித்தனர். கண்ணீர் புகை குண்டு வீசியும் வன்முறையாளர்கள் கலையவில்லை. லத்தியால் கலைக்க முற்பட்டோம், ரப்பர் தோட்டாக்களால் கலைக்க முற்பட்டோம் அப்போதும் கலையவில்லை. துப்பாக்கியால் சுடுவோம் என எச்சரித்தோம். கலையாமல் தொடர்ந்து அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டோம். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத சூழலில் நான் துப்பாக்கியை பிரயோகம் செய்ய உத்தரவிட்டேன். ஜான்சி (40) என்ற பெண் சுடப்பட்டு கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.