தமிழ்நாடு

“ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம்” - திருமாவளவன்

“ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம்” - திருமாவளவன்

kaleelrahman

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம் என தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அனைத்து கட்சிக் கூட்டம் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை மட்டும் அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்ற முடிவு நெருடலாகவும் உறுத்தலாகவும் உள்ளது. எனினும் அனைத்துக் கட்சிகளின் முடிவு என்ற வகையில் அம்முடிவுக்கு உடன்படுகிறோம்.

பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முரணான முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கும். அதே வேளையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக திறப்பதற்கு இது வழிவகுத்துவிடக் கூடாது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.