ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்த தொழிலாளிகள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கு சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை தொடர்ந்து ஆலையை மீண்டும் இயக்க அரசு முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கிராம மக்கள், ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை மனுவினை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த தொழிலாளிகள் ஆலை மூடப்பட்டதால் முற்றிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாத சூழல் உள்ளதாகவும் இதனால் தமிழக அரசு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவினை ஆட்சியரிடம் அளித்தனர்.