தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரது உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதில் இருவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகிறார்கள். மேலும் 6 உடல்கள் நீதிமன்ற உத்தரவுப்படி பதப்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 7 பேரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பாக அரசு தெளிவான அறிக்கை தாக்கல் செய்யும் வரை உடல்களை பதப்படுத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்த பின்னர், துப்பாக்கிக் குண்டு பாய்ந்த இடங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனை விதித்து மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவர்கள் இருவர், ஜிப்மர் மருத்துவர் ஒருவர் அடங்கிய குழு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்து வருகிறது. அதேவேளையில், மீதமுள்ள 6 பேரது உடல்களை தாங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வரும் 6ம் தேதி வரை அந்த 6 பேரது உடல்களையும் பதப்படுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.