தமிழ்நாடு

'முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை'  உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான்

'முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை'  உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – சீமான்

Veeramani

சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழச்சொந்தங்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்தி, 'முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை' உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடு, உட்கட்டமைப்பு, கல்வி, திறன், மேம்பாடு போன்றவற்றிற்காக 317.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே வேளையில், சிறப்பு முகாம்களில் வசிக்கும் ஈழச்சொந்தங்களை முகாம்களுக்கு வெளியே குடியமர்த்தி, அவர்களது நலவாழ்வினையும் உறுதிசெய்து, நாம் தமிழர் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையான 'முகாம்களே இல்லாத் தமிழ்நாட்டினை' உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்திருக்கிறார்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, இலங்கை தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும் என்று கூறினார். முகாம்களில் மின் வசதி , கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றார். இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பொறியியல் படிப்பு பயில, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என அறிவித்த முதலமைச்சர் ஐந்தாயிரம் முகாம்வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடியதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும் என்று கூறினார். அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மொத்தமாக 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இலங்கை தமிழர் நலன் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.