தமிழ்நாடு

இ-பாஸ் ஒட்டியிருந்த காரை திருடி மலைமேல் குத்தாட்டம் போட்ட திருடர்கள்

இ-பாஸ் ஒட்டியிருந்த காரை திருடி மலைமேல் குத்தாட்டம் போட்ட திருடர்கள்

PT

வாணியம்பாடியில் இ பாஸ் உடன் இருந்த பத்திரிக்கை ஏஜெண்ட்டின் காரை திருடிச் சென்று, மலையின் மீது நிறுத்தி வைத்து நடனமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காதர் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் தவசிப் அலி. இவர் தனியார் நாளிதழ்கள் ஏஜெண்ட் ஆக உள்ளார். நேற்று இரவு பணிகளை முடித்து வீட்டிற்கு வந்த தவசிப் அலியின் காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் எழுந்து வீட்டிற்கு முன்பு வந்த அவர், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து கார் திருடுபோனது குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தவசிப் அலி புகார் ஒன்றை கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல் துறையினருக்கு, கார் ஒன்று வாணியம்பாடி நியூட்டன் பகுதி அருகே உள்ள மலை மீது இருப்பதாகவும், காரில் வந்தவர்கள் அங்கு பாட்டுப் போட்டுக்கொண்டு நடனமாடி வருவதாகவும் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மலைக்கு விரைந்து சென்ற காவலர்கள் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் காவலர்கள் கேட்ட கேள்விக்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் காரை திருடியது வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த சையத் பாஷா மகன் சர்தார் என்பது தெரியவந்தது. விசாரணையில் காதர்பேட்டை பகுதியிலிருந்து காரை திருடி வந்ததாகவும் அதில் இ-பாஸ் உள்ளதால் கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் போலீசார் யாரும் தம்மை பிடிக்க மாட்டார்கள் என்று எண்ணி திருடியதாகவும் சையத் ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்