நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் உள்ள கோயிலில் 13 உலோகச் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் உள்ளது நாறும்பூ நாதர் கோயில். கடந்த 2005ஆம் ஆண்டு நாறும்பூ நாதர் கோயில் பூட்டை உடைத்து 13 உலோகச் சிலைகள் திருடப்பட்டன. இவற்றில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆனந்த நடராஜர் சிலை உட்பட 4 சிலைகள் கடந்த 2006ஆம் ஆண்டு சென்னையில் இருந்து மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து லண்டனுக்கு கடத்தப்பட்டன. லண்டனில் ஆனந்த நடராஜர் சிலையின் கை அறுக்கப்பட்டு புதிதாக உலோக கை பொறுத்தப்பட்டது. நடராஜர் சிலை லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்ட 17 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த பரமதுரை என்பவர் சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் உடனடியாக பரமதுரையை கைது செய்தனர்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்டுள்ள பரமதுரை மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் கூறினர். கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் பரமதுரை சிறையில் அடைக்கப்பட்டார். ஆனந்த நடராஜர் சிலை உட்பட 4 சிலைகளும் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.