தமிழ்நாடு

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு

சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு

webteam

நீதிமன்றம் அமைத்த சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவை கலைக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க அரசாணை வெளியிட்டதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்த யானை ராஜேந்திரன், சிலைக் கடத்தல் வழக்கில் தனது தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கோரினார். இதை எதிர்த்து, அரசு சார்பில் தமிழக உள்துறை இணைச்செயலாளர் முருகன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையை திசை திருப்பும் நோக்கில் சிபிஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. நியாயமான விசாரானை நடப்பதை உறுதி செய்யவே சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு தன் கடமையை செய்யும்போது, உள்நோக்கம் கற்பிக்க முடியாது. சிலைக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூண்டுதலிலோ அல்லது தனி நபர்களின் பயனுக்காகவோ சிபிஐக்கு மாற்றவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், “சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணையில், இதுவரை ஒரு அறிக்கை கூட அளிக்கவில்லை. டிஜிபி அழைக்கும் ஆய்வுக் கூட்டத்திற்கும் அவர் வருவதில்லை.
 
பலமுறை கோரிக்கை விடுத்தும் பொன்.மாணிக்கவேல் சிலைக் கடத்தல் விசாரணை குறித்த விவரங்களை வழங்கவில்லை. சிலைக்கடத்தல் புகார்கள் அதிகரித்து வருவதன் காரணமாகவும், பல மாநிலத்தவரும், வெளிநாடுகளும் சம்பந்தப்பட்டிருப்பதாலும் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. புலன் விசாரணையில் 113 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பதிலுக்கு காத்திருக்கிறோம். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. புலன் விசாரணையை நேர்மையாக நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவே விசாரானை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிமன்றம் அமைத்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை கலைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என மனுவில் கூறப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவுலு அமர்வு, அரசின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு யானை ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டது. அவர் அவகாசம் கோரியதால் வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.