தமிழ்நாடு

பூலித்தேவன் படையில் போராடிய வெண்ணிக்காலாடிக்கு சிலை - செயலர் பதிலளிக்க உத்தரவு

பூலித்தேவன் படையில் போராடிய வெண்ணிக்காலாடிக்கு சிலை - செயலர் பதிலளிக்க உத்தரவு

webteam

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு சிலையும், மணிமண்டபமும் அமைத்து, அவரது நினைவு நாளை அரசு சார்பில் அனுசரிக்கக் கோரிய வழக்கில் தமிழக உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக விடுதலை கழக தலைவர் ராஜ்குமார், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் இந்திய விடுதலைக்காக ஏராளமானோர் போராடி இன்னுயிரை ஈந்தனர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் சிலைகள் மற்றும் நினைவிடங்களை அமைத்து கௌரவிக்க வேண்டியது அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தென்தமிழகத்தில் பூலித்தேவன் ஆண்ட நெற்கட்டும்சேவல் பகுதி வாசுதேவநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது. அப்போதைய காலத்தில், பிரிட்டிஷாருக்கு எதிராக வெண்ணிக்காலாடி தலைமையிலான பூலித்தேவன் படையினர் கடுமையாகப் போராடினார். பிரிட்டிஷாரை விரட்டியடித்த இந்தப் போரில் வெண்ணிகாலாடி உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததன் நினைவாக பூலித்தேவன் கல்தூண் ஒன்றை நிறுவினார். அந்தத் தூண் காலாடி மேடு என்று இன்றும் அழைக்கப்படுகிறது. 

ஆகவே காலாடி மேடு பகுதியில் வெண்ணிக்காலாடிக்கு சிலையும், மணிமண்டபமும் கட்டி, அவரது நினைவு தினத்தை அரசு சார்பில் அனுசரிக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. ஆகவே வாசுதேவநல்லூர் தாலுகா, காலாடி மேடு பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு சிலையும், மணிமண்டபமும் அமைத்து, அவரது நினைவு நாளை அரசு சார்பில் அனுசரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு இதுதொடர்பாக தமிழக உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.