கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவரை சாதிய தீண்டாமையுடன் நடத்துவதாக எழுந்த புகார் தொடர்பாக பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா ஜெ.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வருபவர் சரிதா. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சரிதாவிற்கு அதே பகுதியில் வசிக்கும் உசிலைமணி என்ற பாலசுப்ரமணியன் என்பவர் சாதிய தீண்டாமையுடன் நடத்துவதாகவும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என்றும், பெயர் பலகையில் பெயரை மாற்றக்கூடாது எனவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டதன் பேரில் டி.எஸ்.பி சிவக்குமார் விசாரணை நடத்தினார். மேலும் இந்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நெகமம் காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது தொடர்பாக மூன்று வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.