தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

webteam

தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை பெறும்வரை அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 18 ஆயிரத்து 600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான இடங்களை பெறும்வரை அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், ஊதிய உயர்வு, பணி உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக  வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக அறிவித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாகவும் இதனால் 200 முதல் 300 மாணவர்களின் மருத்துவ இடங்கள் ரத்து செய்வதற்கான ஆபத்தான சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ இடங்களை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.