முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் என பாராட்டும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை செயலாற்றும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அருள்மிகு வனப்பத்திர காளியம்மன் திருக்கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றை இன்று ஆய்வு செய்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது...
கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இதுவரை நடத்திய ஆய்வில், சில கோயில்களில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் கோயில் திருப்பணிகளில் நாட்டம் இல்லாமல் இருப்பதும், இதனால் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து கோயில் திருப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.
எந்த பேதமும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து கோயில் குடமுழுக்கு பணிகள் நடைபெறும். ஆன்மிக பெருமக்கள் மகிழ்ச்சியடைந்து மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் என பாராட்டும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயலாற்றும்” என்றார்.
மேட்டுப்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம் இவ்வாண்டு நடைபெறுமா என்ற கேள்விக்கு, "கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த நிலை வேறு தற்போதைய நிலை வேறு. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களிலேயே புத்துணர்வு பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதோடு யானைகள் கோயில்களிலேயே குளிக்க பிரத்யேக குளியல் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது” என பதிலளித்தார்.
ஆய்வின்போது அமைச்சருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.