கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் கொரோனாவை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்களை மூடவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட வேண்டும். திருமண மண்டபங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம். கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடைக்காலப் பயிற்சி வகுப்புகளை மார்ச் 31 வரை நடத்தக்கூடாது. அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூடவேண்டும். விடுமுறை காரணமாக பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன் எனவும் கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன் எனவும் பேசினார். மேலும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் WORK FROM HOME அளிக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஸ்டாலின் வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.