நிதி நிலையை பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை போன்று கையேந்தும் நிலையில் மாநிலங்கள் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில் பேசிய அவர், ''do or die என்பதை மாற்றி do & die என செயல்படுவேன். அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம், அரசு ஊழியர்கள் இல்லையேல் அரசாங்கம் இல்லை. திமுக ஆட்சி அமைந்த போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். கருணை அடிப்படையில் வேலை வழங்கியது, திருமணக் கடன், நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் தான். ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடும் நெருக்கடி இருப்பினும் 1.1.2021 முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெற்றுள்ளனர்.
சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது. ஜிஎஸ்டி, வெள்ள நிவாரண நிதி தர வேண்டியதும் ஒன்றிய அரசு தரவில்லை. நிதி நிலையை பொறுத்தவரை ஒன்றிய அரசிடம் கொத்தடிமை போன்று கையேந்தும் நிலையில் மாநிலங்கள் உள்ளது'' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.