நெடுவாசல் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்த ஸ்டாலின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசினார். நெடுவாசல் போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதாக தமிழிசையின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், நெடுவாசல் போராட்டத்தில் திமுகவிற்கு அரசியல் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
முன்னதாக மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், தமிழர்களாக பிறந்திருப்பதால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம் என கூறினார். மாநில அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காது என உறுதியளித்தாலும் மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பொதுமக்களின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும் எனவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகம் தொடர்பாக 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததாகவும் ஆனால் அதில் நெடுவாசல் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.