தமிழ்நாடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் விதிமுறை மாற்றம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் விதிமுறை மாற்றம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் சமூக நீதிக்கு எதிரான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடும்போது, மிகச்சிறந்த மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகளை அறிந்துகொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 

யூபிஎஸ்சி தேர்வில், பல தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து சமூக நீதிக்கொள்கைகளுக்கு அநீதியைச் செய்ய பாஜக அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்துவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். தற்போதுள்ள நடைமுறைபடியே, பணியிடங்களும், பணி புரியும் மாநிலங்களும் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும், தவறினால் பாஜக அரசை எதிர்த்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.