தமிழ்நாடு

“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளா?” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளா?” - மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

webteam
கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, மாநில உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் கேலி செய்யும் மிகப்பின்னடைவான நடவடிக்கை என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். 
மத்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியே தற்போது கேள்விக்குறியாகியுள்ள சூழலில், மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளைக்கூட டெல்லியிலிருந்து, நிர்வகிக்கவும், அந்த வங்கிகளின் நிர்வாக இயக்குநர்கள் குழுக்களைக் கலைக்கும் அதிகாரம் பெறவும், ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ள ஸ்டாலின், இந்த அவசரச் சட்ட முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 
மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் விதத்திலும், விவசாயப் பெருங்குடி மக்கள் கடன் பெறும் வசதிகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்திடும் வகையிலும், முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திட வேண்டும் என்றும், இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்துமாறு தேவையான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயல்கிறது என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றே கூட்டுறவு வங்கிகள் இயங்குகின்றன. கூட்டுறவு வங்கிகள் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளே கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கின்றனர். ரிசர்வ் வங்கியைக் கேட்டுத்தான் செயல்பட வேண்டுமென புதிய சட்டம். மத்திய அரசின் சட்டத்தை ஆரம்பத்திலேயே எதிர்த்து விட்டோம்” என்றார்.