தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவியா?

உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் பதவியா?

webteam

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்குமாறு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் கடிதம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் புதிய எம்எல்ஏக்கள் 13 பேரிடமும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். திமுக மாவட்டச் செயலாளர்களும், மூத்த தலைவர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் வெற்றிக்கு ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் எளிமையான, சுறுசுறுப்பான பரப்புரையும் முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. உதயநிதியின் அணுகுமுறைகளையும், செயல்பாடுகளையும் பாராட்டியதோடு, அவரை இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்குமாறும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஸ்டாலின் வகித்து வந்த பதவி என்பதாலும், கட்சியில் செல்வாக்கு மிக்க பதவி என்பதாலும், உதயநிதியை அந்தப் பதவியில் வைத்து பாராட்ட வேண்டுமென நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் செவிமடுத்த ஸ்டாலின், எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க விருப்பம் தெரிவித்தும், கோரிக்கை விடுத்தும், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கட்சியின் தலைமைக்கு கடிதம் கொடுத்து வருகின்றனர். கடிதங்களைக் கேட்டுப் பெறும் வேலையில் மகேஷ் பொய்யாமொழி ஈடுபட்டிருப்பதாகவும், இந்தப் பணியைத் தொடங்கி வைத்ததே, ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள்தான் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத உதயநிதியை, எடுத்த எடுப்பிலேயே இளைஞரணி செயலாளர் என்ற செல்வாக்கு மிக்க பதவியில் அமர்த்தினால் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் எழக்கூடும் என சில மூத்த தலைவர்கள் கருதுவதாகப் பேசப்படுகிறது. இதனால் அடுத்த தேர்தலில் பாதிப்புகள் நேரிடக்கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகத் தெரிகிறது. ஸ்டாலின் முதலமைச்சராகி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன் உதயநிதி கட்சிப் பதவிக்கு வந்தால் நல்லது என கட்சியின் மூத்த தலைவர்கள் யோசனை கூறுவதாகவும் தக‌வல்கள் தெரிவிக்கி‌ன்றன.