திமுக தலைவர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஸ்டாலின், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குழந்தை வளர்ச்சி மையத்தை திறந்து வைத்து, குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 82 லட்சம் ரூபாய் செலவின் மேம்படுத்தப்பட்ட தாமரைக்குளத்தை ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், 60 மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் அங்கிருந்த பயிற்சி உபகரணத்தில் தானும் பயிற்சி செய்தார். மேலும் 69 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்களுக்கான நூலகத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கினார். தையல் இயந்திரம், சரக்குகளை ஏற்றிச் செல்ல மீன்பாடி வண்டி ஆகிய நலத்திட்ட உதவிகளையும் தொகுதி மக்களுக்கு ஸ்டாலின் அளித்தார். இதேபோல அனிதா பயிற்சி மையத்தில், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியும் பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.