தமிழகத்தில் பொது விநியோக திட்டம் முற்றிலும் சீர்குலைந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷனில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் இந்த மாதத்தில் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், ஏழை எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுவதாக தெரிவித்துள்ளார். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் ரகசியமாக கையெழுத்திட்டபோதே, அதனால் தமிழகத்துக்கு என்ன லாபம், என்ன நஷ்டம் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக வலியுறுத்தியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ரேஷனில் பருப்பு, பாமாயிலுக்கான கொள்முதலுக்கு டெண்டரே விடப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், ஒரு கடையில் ஆயிரம் கார்டுகள் இருந்தால் 400 கார்டுகள் அளவுக்கே பொருட்கள் ஒதுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைகள் சங்கத் தலைவர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, ரேஷனில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யத் தவறினால் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.