தமிழ்நாடு

ஐஐடி மாணவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின்

webteam

மாட்டுக்கறி விருந்தில் பங்கேற்றதற்காக தாக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவர் சூரஜை, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணைக்கு எதிராக சென்னை ஐஐடி மாணவர்கள் மாட்டுக்கறி விருந்து உண்ணும் விழாவினை நடத்தினர். இந்த விழாவில் பங்கேற்ற முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சூரஜை, ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த சூரஜ், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் மாணவர் சூரஜை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவரிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா உடனிருந்தார். மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகமும், சென்னை மாநகர காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.