தமிழ்நாடு

ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா... யார் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்? - எல்.முருகன்

kaleelrahman

"தமிழக அரசியலில் தற்போது உள்ள வெற்றிடத்தை தேசிய ஜனநாயக கூட்டணி தான் நிரப்பும் - ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும்" என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறுகையில், "வரும் 14ஆம் தேதி சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்கிறார். மதுரையில் பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதன் பின்னணியில் சில விஷமிகள் உள்ளனர், திட்டமிட்டு பயங்கரவாதிகள் தேச விரோதிகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர், இப்போதே அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதனை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது, வேட்பாளர் குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். முள்ளி வாய்க்கால் சம்பவம் கண்டிக்கத்தக்கது, நினைவுத் தூண் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும், தமிழக விவசாயிகள் மோடியின் வேளாண் திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களும் விவசாயிகளும் திமுகவிற்கு தோல்வியை கொடுக்க தயாராக உள்ளனர். விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வருவதாக ஸ்டாலின் கூறுகிறார், 2011-க்கு முன் திமுக தமிழகத்தை எப்படி சீரழித்தார்கள் என்பதை அனைவரும் பார்த்தோம் 2011-க்கு முன் தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது, 2011-க்கு பின் தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகியது.

திமுகவினர் எப்படி நிலங்களை அபகரித்தார்கள் என்பது தெரியும். தமிழக அரசால் நில அபகரிப்புக்கு என தனி பிரிவே உருவாக்கப்பட்டது, பெண் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக செயல்கள் பேச்சோடுதான் உள்ளது, அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த சகோதரி பூங்கோதை ஆலடி அருணாவுக்கு அக்கட்சியில் பாதுகாப்பு இல்லை.

தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும்.

காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இடம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை, அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா என்பதும் தெரியவில்லை. ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர், ஆன்மீகத்தை எடுத்து செல்பவர் நிச்சயம் அவரின் ஆதரவு பாஜக விற்கு கிடைக்கும். கர்நாடக எல்லை பகுதியில் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் நடைபெறும் தாக்குதல் கண்டிக்கதக்கது என்றும் கூறினார்.