தமிழ்நாடு

“ஸ்டாலின் தன் செல்வாக்கை இழந்து வருகிறார்” - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

webteam

தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், தேனூர், திருவேடகம், மேலக்கால் போன்ற தொகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் வாக்குச்சேகரிப்பு செய்தார். அதன்பின்பு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகம் அமைதி பூங்காவாக இன்றைக்கு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஸ்டாலின் தனது செல்வாக்கை இழந்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய 32,000 முயற்சிகளை அவர் செய்து பார்த்து தோல்வியுற்றார்.

குடியுரிமை பற்றி யாரும் சந்தேகம் எழுப்ப வேண்டாம், வதந்தி கிளப்ப வேண்டாம், அவதூறு செய்ய வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. குர்ஆனில் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய சகோதரர்களின் குடியுரிமை பற்றி எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஆனால் இன்று ஸ்டாலின் இல்லாத ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார்.

காவல்துறை அனுமதி மறுத்தும் நாங்கள் நடைபயணம் மேற்கொள்வோம் என்கிறார். ஏனென்றால் தமிழகம் பற்றி எரிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். தமிழகம் வளர்ச்சியை நோக்கி செல்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதலில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தருவதை தடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அடுத்து குடியுரிமை திருத்த சட்டத்திற்காக நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் இவர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றத்திடம் கொட்டு வாங்கி திரும்புகிறார்கள். ஸ்டாலினிடம் நியாயம் இல்லை, தர்மம் இல்லை, பதவி வெறிதான் இருக்கிறது” என்றார்.