தமிழ்நாடு

தமிழ்வழி பயின்ற 196 இளைஞர்களின் எஸ்.ஐ வாய்ப்பு பறிபோனது: அரசுமீது ஸ்டாலின் சாடல்!

Sinekadhara

எஸ்.ஐ தேர்வில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாததால், 196 இளைஞர்களுக்கான வாய்ப்பு பறிபோய்விட்டது என்றும், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் இந்த இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்காதது மிகுந்த கண்டனத்திற்குரியது. தாய்மொழிக் கல்விக்கு திமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு முன்னுரிமையை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது.

கடந்த ஜனவரி மாதத்தில் 969 பணியிடங்களுக்கு நடைபெற்ற சார்பு ஆய்வாளர் தேர்வில் இந்த இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் தமிழ் வழியில் பயின்ற 196 இளைஞர்கள் சார்பு ஆய்வாளர்களாகத் தேர்வுபெற்றிருக்க முடியும். ஆனால் அ.தி.மு.க அரசின் மெத்தனத்தால், தமிழ்வழி பயின்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த இடஒதுக்கீடு இல்லாமலேயே நேர்முகத் தேர்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தமிழ்வழி பயின்ற விண்ணப்பதாரர்கள் 20 சதவீத இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்றிடும் வகையில், தற்போது நடைபெறும் சார்பு ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வினை மாற்றியமைத்திட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ்வழி பயின்ற இளைஞர்களுக்கான இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.