முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி pt web
தமிழ்நாடு

அணைக்கப்பட்ட மைக்.. மம்தா வெளிநடப்பு.. “முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவீர்களா?” - ஸ்டாலின் கண்டனம்

எதிர்க்கட்சிகளின் குரலை ஒலிப்பதற்காகவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவித்திருந்த மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

Angeshwar G

நிதி ஆயோக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. வழக்கமான வருடாந்திர கூட்டமாக நடைபெறும் இந்த கூட்டம், I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பை அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக மாறியுள்ளது.

மூன்றாவது முறை பாஜக கூட்டணி அரசு அமைந்த பிறகு மற்றும் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான முதல் நிதி ஆயோக் கூட்டம் இதுவாகும். மத்திய பட்ஜெட்டில் INDIA கூட்டணி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பிய எதிர்க்கட்சிகள், இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களான கர்நாடகாவின் சித்தாராமையா, தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேசத்தின் சுக்விந்தர் சுகு மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை அடுத்து நிதி ஆயோக் கூட்டம் அரசியல் ரீதியாக பேசு பொருளாகியுள்ளது.

5 நிமிடங்களுக்குள் அணைக்கப்பட்ட மைக்

அதேநேரம், “கூட்டத்தில் பங்கேற்று, INDIA கூட்டணி முதலமைச்சர்கள் புறக்கணித்ததற்கான காரணத்தையும், மத்திய அரசின் பாகுபாட்டை கண்டித்தும் குரல் கொடுப்பேன்” என் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அவர் வெளிநடப்பு செய்துள்ளார். நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், பேசுவதற்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறி வெளிநடப்பு செய்துள்ளார்.

மம்தா பானர்ஜி

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளேன். சந்திரபாபு நாயுடுவிற்கு பேசுவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. கோவா, சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்கள் 10 முதல் 12 நிமிடங்கள் பேசினர். 5 நிமிடங்களில், நான் பேசி முடிப்பதற்குள் எனது மைக் அணைக்கப்பட்டது.

எல்லா மாநிலக் கட்சிகளையும் அவமதித்துள்ளீர்கள்

உண்மையில் நான் கலந்துகொண்டதற்கு நீங்கள் (மத்திய அரசு) மகிழ்ச்சி கொண்டிருக்க வேண்டும். ஆனால் அநியாயம் இழைத்துள்ளீர்கள். எதிர்க்கட்சியில் இருந்து நான் மட்டுமே வந்துள்ளேன். நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இதன்மூலம் மேற்கு வங்கத்தை மட்டும் அவமதிக்கவில்லை. எல்லா மாநிலக்கட்சிகளையும் அவமதித்துள்ளீர்கள். கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே நான் கலந்துகொண்டேன்.

இது பாரபட்சமான பட்ஜெட். நீங்கள் ஏன் மற்ற மாநிலங்களை பாரபட்சமாக நடத்துகிறீர்கள்? நீங்கள் மாநில அரசுகள் மீது பாரபட்சம் காட்டக்கூடாது என நான் கேட்டேன். நிதி ஆயோக்கிற்கு நிதி தொடர்பான அதிகாரம் இல்லை. பின்னர் எப்படி அது வேலை செய்யும்? நிதி ஆயோக்கிற்கு நிதி அதிகாரம் கொடுங்கள் அல்லது திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வாருங்கள்” என தெரிவித்தார்.

இப்படித்தான் ஒரு முதலமைச்சரை நடத்துவீர்களா?

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இதுதான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.