பத்திரிகையாளர்களையும், தலைவர்களையும் அநாகரீகமாக விமர்சித்துப் பேசுவதை பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தந்தை பெரியாரை ஏற்கனவே கொச்சைப் படுத்திப் பேசிய ஹெச்.ராஜா, பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகக் கூறியுள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை கொச்சைப்படுத்திப் பேசியிருப்பதுடன், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை இந்திய விரோதி என கை நீட்டி, ஆவேசமாகவும், ஆணவமாகவும் பேசியுள்ளார் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் நாகரீக அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புவதாகக் கூறி வரும் பாரதிய ஜனதா தேசியத் தலைவர்கள், ஹெச்.ராஜாவின் பேச்சுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ரயில்வே துறையில் அரசு பொறுப்பையும் வழங்கி இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் அவதூறாகப் பேசி வரும் ஹெச்.ராஜா மீது பாரதிய ஜனதா தேசிய தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.