தமிழ்நாடு

“நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது” -சி.வி.சண்முகம் மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்

“நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது” -சி.வி.சண்முகம் மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்

webteam

டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும்தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற 3-ஆம் கட்ட பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விழுப்புரத்தில் பேசினார். அப்போது, தளவானூர் அணை உடைப்பு விவகாரம் குறித்து பேசினார். “டெண்டர் விடுவதிலும் ஊழல் செய்வதிலும்தான் அதிமுக அரசு அக்கறை செலுத்துகிறது. முதலில் அணை என்கின்றனர். பின்னர் சுவர் என்கின்றனர். அணையை காணோம் என்று மட்டும்தான் சொல்லவில்லை.

அணை உடைப்பு விவகாரத்தில் பொதுப்பணித்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி இதற்கு பதில் சொல்வாரா? எல்லாம் தெரிந்த மேதாவி சி.வி.சண்முகம் பதில் சொல்வாரா? கண் துடைப்புக்காக சில பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்.

ரயில் இன்ஜினை திருடியவர்களை விட்டுவிட்டு கீழே விழுந்த கரித்துண்டை எடுத்தவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் மூலமாக சி.வி.சண்முகத்திற்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் வகிக்கும் பதவி மரியாதைக்குரியது. மாண்புக்குரியது. அந்த மரியாதையை காப்பாற்றும் வகையில் நடந்துக்குங்க. பேசுங்க. இதுதான் எனது வேண்டுகோள்.

என்னை ஒருமையில் சிவி சண்முகம் பேசுகிறார். அதனால் என் தகுதி குறையப்போவதில்லை. அண்ணா அடிக்கடி ஒரு கதை சொல்வார். ஒரு கோயில் யானையை குருக்கல் ஒருவர் குளிக்க வைத்து விபூதி பூசி அழைத்து வருகிறார். அப்போது எதிரே பன்றி ஒன்று சேரும் சகதியுமாக வந்தது. அதைப்பார்த்து யானை சற்று நகர்ந்து கொண்டதாம். இதனால் பன்றி நம்மை பார்த்து யானை பயந்துவிட்டது என்று நினைத்ததாம். அதுபோல் இருக்கிறது” என்றார்.