குடும்ப அட்டையில் உள்தாள் ஒட்டுவதற்கு பதிலாக அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011-ல் ஆட்சிக்கு வந்ததும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட அதிமுக அரசு, தற்போது மீண்டும் குடும்ப அட்டைகளில் உள் தாள் ஓட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். சட்டமன்றத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்திற்காக அறிவிக்கப்பட்ட 318 கோடி ரூாபய் நிதி என்னவாயிற்று என்று தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அறிவிப்பும் ஆடம்பரமும் மட்டுமே அதிமுக அரசின் அடையாளங்கள் என்பதற்கு ஸ்மார்ட் கார்டு திட்ட அறிவிப்பு உதாரணம் என்றும் விமர்சித்துள்ளார். ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முக்கியம் என்பதால், அறிவித்தபடி ஸ்மார்ட் கார்டு வழங்க முதலமைச்சர் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.