சென்னை விமான நிலையம் pt web
தமிழ்நாடு

தீவிரப் புயலாக மாறிய மிக்ஜாம்; பெங்களூருவிற்கு திரும்பிய 32 விமானங்கள்!

மிக்ஜாம் புயல் தீவிரப் புயலாக மாறிய நிலையில் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் 25 செமீ மழை பதிவாகியுள்ளது.

Angeshwar G

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சென்னையின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீரானது வீடுகளில் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்துடன், இன்று இரவு வரை மழையும், காற்றும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேளச்சேரியில் தேங்கிய மழைநீர்

15 மணி நேரத்திற்கும் மேலாக மழை தொடரும் நிலையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை அண்ணாநகரில் 18.3 செமீ மழையும் கோடம்பாக்கத்தில் 18.2 செமீ மழையும் பதிவாகியுள்ளது. அடையாறு சுற்றுவட்டார பகுதிகளில் 17.4 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 20 செமீ மழையும், வளசரவாக்கத்தில் 19 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

புதிய தலைமுறையிடம் வெதர்மேன் பிரதீப்ஜான் பிரத்யேகமாக அளித்த பேட்டியில், “அடர்ந்த மேகங்களாக இருப்பதால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் 200 மிமி முதல் 300 மிமி மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் இன்று வரை உயர்ந்த பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் ஒரே அளவில் மழை இருக்கிறது.

நேற்று காலை 8 மணி வரை 60 முதல் 70 மிமி மழை இருந்தது., இன்று 230 மிமி முதல் 280 மிமி வரை பதிவாகி இருப்பதை பார்த்தோம். இன்று காலை 8.30 மணிக்குப் பிறகே 70 மிமி மழை பெய்துள்ளது. இன்று இரவு வரை 100 முதல் 150 மிமி வரை பெய்ய வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 400 முதல் 450 மிமீ வரை மழை பெய்யவாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்திருந்தார்.

பிரதீப் ஜான்

சென்னை விமான நிலைய பகுதியில் 25 செமீ அளவுக்கு அதி கனமழை பெய்துள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது இன்றிரவுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய 32 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.

இதற்கிடையே, புயலாக இருந்து வந்த மிக்ஜாம் தற்போது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. சென்னையில் இருந்து கிழக்கே வடகிழக்கு திசையில் 90 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

மணிக்கு 10 கிமீ என்ற அளவில் புயல் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் நாளை மசூலிப்பட்டிணம் - நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரப்புயலாக மாறியதால் மழை மேகங்கள் அதிக அளவில் சூழ்ந்து அதிக அளவில் மழை பெய்யக்கூடும். புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை நெல்லூர் பகுதிக்கு செல்லும் பொழுது மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது. தற்போது காற்று பல இடங்களில் 80 கிமீ வேகத்தில் வீசி வருகிறது.