தலைமைச் செயலக தரைத்தளத்தில் சேதம் pt web
தமிழ்நாடு

தலைமைச் செயலக தரைத்தளத்தில் சேதம்.. அச்சத்தில் வெளியேறிய ஊழியர்கள்! அமைச்சர் எ.வ. வேலு சொல்வதென்ன?

தலைமைச் செயலகத்தில் உள்ள தரைத்தளத்தில் சேதம் ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

PT WEB

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த மாளிகையின் முதல்தளத்தில் தரைத்தள ஒடுகளில் திடீரென சேதம் ஏற்பட்டதால் தலைமைச் செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கட்டடத்தில் பணியாற்றிய மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அச்சத்தின் காரணமாக வெளியேறினர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், “டைல்ஸில் ஏற்பட்டுள்ள சாதாரண காற்று விரிசல்தான் இது. இதில் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. அதுவும் சீர் செய்யப்பட்டுவிடும். ஊழியர்கள் அச்சப்பட வேண்டாம்” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அச்சத்தில் வெளியேறிய ஊழியர்களையும் மீண்டும் பணிக்குத் திரும்புமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், “முதலில் கட்டட விரிசல் என தகவல் கிடைத்தது. சென்று பார்த்ததில் டைல்ஸ் ஏர் க்ராக் ஆனது தெரியவந்தது. டைல்ஸ் ஏர் க்ராக் ஆனதில் சத்தத்துடன் வெடித்துள்ளது; அதுமட்டுமின்றி புகையும் வந்துள்ளது. இதன்காரணமாக எழுந்த அச்ச உணர்வும், செய்தி பரவியதும் ஊழியர்கள் எல்லோரும் கீழே வந்துவிட்டனர். பொதுப்பணித்துறையினர் கட்டடத்தின் நிலைத்தன்மையை மட்டும் சரிபார்க்க வேண்டும். மற்றபடி ஒன்றும் இல்லை” என்றார்.

சேதம் அடைந்த பகுதியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாமக்கல் மாளிகை கட்டடத்தில்தான் தலைமைக் கழக செயலகத்தின் முழு அலுவலகங்களும் இருக்கின்றன. இதில் முதல் தளத்தில் விவசாயத்துறை அலுவலகம் இருக்கிறது. இங்கு திடீரென்று விரிசல் ஏற்பட்டதில் ஊழியர்களிடம் ஏற்பட்ட பயத்தினால், ஊழியர்கள் அனைவரும் கீழ் தளத்திற்கு வந்துவிட்டார்கள். எனக்கு தகவல் கிடைத்ததும் இங்கு வந்து, பொறியாளர்களை வைத்து சோதனை செய்ததில், கட்டடத்தின் உறுதித்தன்மை நிலையாகத்தான் இருக்கிறது.

தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அந்தக்காலக்கட்டத்தில் சிறு சிறு டைல்ஸ்கள்தான் தயாரிக்கப்பட்டன. அதனால் அத்தகைய டைல்ஸ்தான் போடப்பட்டது. நாள்படும்போது, இதில் ஏர் க்ராக் வந்துவிடும். இந்த ஏர் க்ராக் வந்ததன் காரணமாகத்தான் அலுவலகத்தில் ஊழியர்கள் அச்சத்தின் காரணமாக வெளியேறிவிட்டார்கள்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு

இந்த பழைய டைல்ஸ்களை அகற்றிவிட்டு புதுவகை டைல்ஸ்களை பதிக்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளேன். நாளையில் இருந்தே அந்த பணிகள் தொடங்கிவிடும். எனவே எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை. கட்டடம் உறுதித்தன்மையுடன்தான் இருக்கிறது” என தெரிவித்தார்.