தமிழ்நாடு

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை - விசாரணையில் தகவல்

webteam

இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டனர்.

தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோருக்கு ஐ.எஸ். பயங்க‌வாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரையும் 10 நாள்கள் காவலில் எடுத்து தனிப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரள மாநிலம் கொச்சி அரசுப்பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 5 குண்டுகள் இருந்ததாக தெரிகிறது. அந்தத் துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்றும் ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.