தமிழ்நாடு

எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் அடுத்தடுத்து புதிய தகவல்கள்..!

Rasus

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டது என தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்தது தெரிய வந்தது. அத்துடன் வில்சன் உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்துள்ளன. இதுகுறித்து தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வில்சனை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்டது என தெரியவந்துள்ளது. வில்சன் கொலை விசாரணையின் போது, பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக இதுவரை 9 பேரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரான ஆம்னி பேருந்து ஓட்டுநர் இஜாஸ் பாட்ஷா, மும்பையிலிருந்து நான்கு பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.

அதில், ஏற்கெனவே கைதாகியுள்ள முகமது ஹனிஃப் கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரிடம் துப்பாக்கிகளை இஜாஸ் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மும்பையிலிருந்து வாங்கி வந்த 4 துப்பாக்கிகளில் ஒன்றை பயன்படுத்தியே காவல் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர் இஜாஸ் பாட்ஷா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.