தமிழ்நாடு

அன்று காட்டுயானை; இன்று கும்கி - கலக்கும் ஸ்ரீநிவாசன் யானை!

அன்று காட்டுயானை; இன்று கும்கி - கலக்கும் ஸ்ரீநிவாசன் யானை!

webteam

கூடலூர் அருகே கடந்த 2016 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டு, முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீநிவாசன் யானை, தற்போது கும்கி யானை பணிக்காக வெளியே கொண்டு செல்லப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வந்த காட்டு யானை கடந்த 2016 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டது. அந்த யானைக்கு ஸ்ரீநிவாசன் என பெயரிடபட்டு, அதற்கு கும்கி பயிற்சி அளிக்கபட்டு வந்தது. அந்த யானையும் பாகன்களின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, பயிற்சிகளையும் ஏற்றுக் கொண்டது. பாகன்களின் கடும் முயற்சி காரணமாக ஸ்ரீநிவாசன் யானை தற்போது கும்கி யானையாக மாற்றம் பெற்றுள்ளது.

கும்கி யானை பணிக்காக ஸ்ரீநிவாசனை வெளி இடங்களுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் தொரப்பள்ளி பகுதியில் உடல்நிலை பாதிக்கபட்டு ஆற்றில் விழுந்து கிடந்த காட்டு யானையை மீட்கும் பணியில் ஸ்ரீநிவாசன் முதன் முறையாக ஈடுபடுத்தப் பட்டது. முதுமலை முகாமில் உள்ள மூத்த கும்கி யானைகளுக்கு வயது முதிர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இளம் யானைகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை கும்கிகளாக மாற்றும் நடவடிக்கைகளில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.