தமிழ்நாடு

’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்

’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்

சங்கீதா

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் 10 இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக்கோரி 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த கடவுசீட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமில் இலங்கையைச் சேர்ந்த 103 பேர் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் கடவுசீட்டு தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்ட 10 பேர் நேற்று தொடங்கி இன்று 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதுவரை விடுவிக்காத நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களை விடுவிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இலங்கை தமிழர்கள் 10 பேர் அகிம்சை முறையில் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து உணவு உட்கொள்ளாத காரணத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆறு பேர் சிறப்பு முகாமில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.