தமிழ்நாடு

’விலைவாசி உயர்ந்தால் இலங்கையின் நிலை இந்தியாவில் ஏற்படும்’ - தமிழக தலைவர்கள் எச்சரிக்கை

’விலைவாசி உயர்ந்தால் இலங்கையின் நிலை இந்தியாவில் ஏற்படும்’ - தமிழக தலைவர்கள் எச்சரிக்கை

Veeramani

தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லையென்றால் இலங்கை போன்று போராட்டம் நடத்தும் சூழல் இந்தியாவில் உருவாகும் என மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

நகர்ப்புற வேலை வாய்ப்பை உறுதி படுத்த வேண்டும் என வலியுறுத்தி  இடதுசாரி கட்சிகள், விசிக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை, கேஸ் உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், " நேற்றைய விழாவில் தற்போது இருக்கும் நாட்டு மக்களின் பிரச்னை குறித்தும், தமிழக முதல்வர் தமிழ்நாடு மக்களின் கோரிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது குறித்தும் பிரதமர் அவர்கள் எதுவும் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது. விலை வாசியை கட்டுப்படுத்தாமல் இருந்தால் இலங்கை நாட்டில் ஏற்பட்டதுபோல் இந்தியாவில் நடக்கும் சூழல் ஏற்படும்.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், கேஸ்  விலையை கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசு துறையில் காலி பணியிடம் நிரப்ப வேண்டும். கருப்பு பணத்தை பறிமுதல் செய்வோம் என்று பிரதமர் பேசியது எதுவும் நடக்கவில்லை. நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. வலுவான போராட்டம் நடத்த மக்களும் தயாராகிவிட்டனர்." என தெரிவித்தார்



இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "தொடர்ந்து விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் இலங்கை போன்று போராட்டம் ஏற்படும் சூழல் இந்தியாவில் நடக்கும் நிலை உருவாகும். இலங்கை நாட்டில் பொருட்கள் உயர்ந்து இருப்பதுபோல் தான் இந்தியாவிலும் விலை உயர்வு ஏற்பட்டு இருக்கிறது, வேலை வாய்ப்பு இல்லாமலேயே இருக்கிறது" என தெரிவித்தார்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "தொடர்ந்து விலை உயர்ந்து வருவதை கண்டித்து ஒரு வாரம் தமிழகத்தில் போராட்டத்தை இடதுசாரி, விசிக நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு அளிப்போம் என்று பேசிய மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன. பொருளாதார சரிவு ஏற்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து இருக்கிறது. மக்கள் பிரச்னை கவனிக்காமல் மத மோதல்கள் நடப்பதை மட்டுமே பாஜகவினர் கவனிக்கின்றனர்" என தெரிவித்தார்