Fishermen pt desk
தமிழ்நாடு

நாகப்பட்டினம்: கடலுக்குச் சென்ற மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - நடந்தது என்ன?

நாட்டுப் படகில் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் படுகாயங்களுடன் மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

webteam

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த என் முருகன் என்பவருக்குச் சொந்தமான படகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இந்திய எல்லைக்குட்பட்ட கோடியக்கரை அருகே உள்ள பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு அதிவேக படகில் வந்த கடற்கொள்ளையர்கள் கடுமையான ஆயதங்களைக் கொண்டு மீனவர்களை தாக்கியுள்ளனர்.

boat

இந்த தாக்குதலில் படகு உரிமையாளர் என் முருகனுக்கு தலை மற்றும் கைகளில் வெட்டு விழுந்துள்ளது.

கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்த தப்பிக்க கடலில் பாய்ந்த சக மீனவர்கள் காயமடைந்த முருகனை மீட்டு செருதூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். மீனவ கிராம தலைவர் மற்றும் மீன்வளத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தங்களை தாக்கியவர்கள், தங்கள் படகில் இருந்த வலை, ஜி.பி.எஸ் கருவி, செல்போன், டார்ச் லைட் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.