இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு சட்டத் துறை பரிந்துரை செய்துள்ளது.
ஆழ்கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வவ்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள சிறைகளில் அடைக்கப்படுவார்கள். அவர்களின் படகுகள் மற்றும் உடைமைகளும் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், நல்லெண்ண அடிப்படையில் அவ்வவ்போது இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதும் உண்டு.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 113 பேரை விடுவிக்க நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு சட்டத்துறை பரிந்துரை செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 8 மீனவர்களைத் தவிர மற்றவர்களை விடுதலை செய்ய பரிந்து செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்படவுள்ள மீனவர்கள் 113 பேரும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.