ஆரணியில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாகநதி ஆற்றங்கரை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் ஊஞ்சல் உற்சவ சேவை நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் பங்குனி மாதம் அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ காளியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பம்பை மேளத்துடன் அம்மனை வர்ணித்து கோவிலைச் சுற்றி வலம்வந்து ஊஞ்சலில் காட்சியளித்த அம்மனுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொது மக்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.