தமிழ்நாடு

மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு

மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகர் பொறுப்பேற்பு

kaleelrahman

மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் கடந்த 13ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து இன்று மறைந்த 292-வது ஆதீனத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குருபூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு, தருமபுர ஆதீன மடத்தின் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி ஞானதேசிக சுவாமிகள் முன்பாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சார்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும், மதுரை ஆதீன திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 4 கோயில்களிலும் தினசரி நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும், குடமுழக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 உத்தரவுகளில் புதிய ஆதீனம் கையெழுத்திட்டார்.