தமிழ்நாடு

ஒட்டு கேட்பது, வேவு பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

ஒட்டு கேட்பது, வேவு பார்ப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

kaleelrahman

"ஒன்றிய அரசே ஒட்டு கேட்பதை, வேவு பார்ப்பதை நிறுத்து; ஒட்டு கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் முக்கிய தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த விவகாரம் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது குறித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ஒட்டு கேட்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தனி நபர் உரிமைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு எதிரானது.

இஸ்ரேலிய பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்படும் 5,000 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , உயர்மட்ட பொறுப்புகளை வகித்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன. இந்த பட்டியலில் இந்திய ஊடகவியலாளர்கள் 40 பேரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக செய்தி. இது அதிர்ச்சி அளிக்கிற செய்தி.

இஸ்ரேலிய ஐ.பி.ஓ நிறுவனம் தாங்கள் இந்த உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அப்படியெனில் வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்? அரசை நோக்கியே சுட்டு விரல்கள் நீள்கின்றன. எனவே இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்றை முன் மொழிந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.