சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, ஒரு கல்வி நகரமாக இருந்து வருகிறது. இங்கு எல்கேஜி முதல் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு வரை படிப்பதற்கான அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒருங்கே அமைந்துள்ளது. அரசு கலைக் கல்லூரி, பெண்கள் கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்கல்வி கல்லூரி, உடற்பயிற்சி கல்வியியல் கல்லூரி மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் அமையப்பெற்ற ஒரு சிறப்பு வாய்ந்த நகரமாக காரைக்குடி இருந்து வருகிறது.
இதனால் சென்னை, கோவை, நெல்லை மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் காரைக்குடியில் கல்வி கற்க வருகின்றனர். இதில், விளையாட்டில் சாதனை படைக்க வேண்டுமென ஆர்வம் காட்டி வரும் மாணவ, மாணவிகள் அதிகம் உள்ள நிலையிலும், ஒரு தரமான விளையாட்டரங்கம் இங்கு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காரைக்குடியில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, கைப்பந்து, இறகு பந்து போன்ற பல விளையாட்டுகளுக்கு மைதானங்கள் இருந்தும் அவை பராமரிக்கப்படாமல் சேதமடைந்து விளையாடுவதற்கு பயனற்றதாக இருந்து வருகிறது. இத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களும் இங்கு இல்லை.
இந்நிலையில், விளையாட்டு வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த நவீன விளையாட்டு மைதானம் அமைத்து, சிறந்த பயிற்சியாளர்களையும் நியமிக்க வேண்டும். அப்போதுதான் சிவகங்கை மாவட்டம் தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலக அரங்கிலும் ஒரு சிறப்பான இடத்தை எட்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் நம்மிடையே தெரிவிக்கின்றனர்.