தமிழ்நாடு

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கோவையிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் !

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கோவையிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் !

jagadeesh

கோவையிலிருந்து 1140 புலம் பெயர் தொழிலாளர்களுடன் உத்தரப் பிரதேசம் மாநிலம் அக்பர்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் இன்று மாலை 4.10 மணிக்குக் கோவையில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

கோவையிலிருந்து புறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்குக் காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில் அவர்களை ரயிலின் உள்ளே அமர வைக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தொழிலாளர்கள் செல்வதற்கான செலவுகளைத் தமிழக அரசே ஏற்றுள்ளது.

பிற மாநிலங்களில் தவித்து வரும் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் இதற்கென நிலையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய வெளிமாநில தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பக்கூடிய நடவடிக்கையைத் தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் படிப்படியாக ரயில் மூலமும் பேருந்துகள் மூலமும் சொந்த மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. இதுவரை தமிழகத்திலிருந்து 3 ரயில்கள் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் ஒருபகுதியாகக் கோவையிலிருந்த உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் 1140 பேர் இன்று கோவையிலிருந்து அக்பர்பூருக்கு ஷராமிக் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.