தமிழ்நாடு

நீட் விலக்கு தொடர்பாக இன்று சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்

Veeramani

நீட் விலக்கு தொடர்பான சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தை நேரலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க சட்டமன்றத்தின் சிறப்புக்கூட்டம் இன்று (8 ஆம் தேதி) நடைபெறுகிறது. சிறப்புக்கூட்டத்தில், நீட் விலக்கு மசோதா மீண்டும் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்காக, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டையில் சிறப்புக்கூட்டம் கூட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, ஆகஸ்ட் மாதம் புனித ஜார்ஜ் கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி படத்திறப்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நடைபெற்று வந்த நிலையில், நீட் விலக்கு தொடர்பான சிறப்பு கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடுகிறது.

காகிதமில்லா சட்டப்பேரவை கூட்டம் என்ற வகையில், புனித ஜார்ஜ் கோட்டையில் ஒவ்வொரு உறுப்பினர் இருக்கையிலும் கையடக்க கணினி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை நேரலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.