புனித வெள்ளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
புனித வெள்ளியானது இயேசு மீண்டும் உயிர் பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களில் கலந்துகொள்வார். சிலுவைப்பாதை நிகழ்ச்சியானது இன்று மாலை நடைபெறும்.
இயேசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சியை நினைவு படுத்தும் வகையில் சிலுவை பாதை நடைபெறும். இதைத்தொடர்ந்து இன்று மாலை சிறப்பு வழிபாட்டு கூட்டமும், வரும் ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இயேசு கிறிஸ்து இன்று மறைந்ததை நினைவுபடுத்தும் விதமாக அனைத்து தேவாலயங்களிலும் சிலுவை நீல நிற துணியால் மூடப்பட்டு உள்ளது.
சென்னையில் சாந்தோம் பசிலிகா, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பெரம்பூர் லூர்து மாதா தேவாலயம், வேப்பேரி செயின்ட் பால் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.