தமிழ்நாடு

சிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்

சிறையில் வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் : ரூபா ஐபிஎஸ்

webteam

சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்கைதியாக உள்ள சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறைச்சாலை விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.அதில், சிறைச்சாலை விதிகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், சமையலுக்கு தேவையான பொருள்கள் அவர்களது அறைக்குள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா, இளவரசி ஆகியோர் கைப்பையுடன் வெளியே சென்றுவந்த வீடியோ குறித்து உயர்மட்டக்குழு விசாரணை நடத்தியது. அதன்படி அவர்கள் பார்வையாளர்களை சந்தித்தாக கூறி சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான நேரத்திற்கும் வேறுபாடு உள்ளதாக குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் சொந்த உடை அணிய சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகவும் தனது அறிக்கையில் உயர்மட்ட விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், சசிகலா இருந்த அறைக்கு திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு, அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுப்பதற்காகத்தான் திரைசீலைகள் போடப்பட்டது என சிறை அதிகாரிகள் கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட வி‌வகாரத்தில் தன்னுடயை குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கை வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ரூபா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு சொந்தமான சிறையில் விதிகளை மீறி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை வழங்கமுடியாது. சிறை அதிகாரிகள் தான் வசதிகள் செய்து கொடுத்தது, அதனால் அவர்களுக்கு தான் தண்டனை வழங்க வேண்டும். நான் சாமான்ய மக்களை போன்று போராட வேண்டி இருந்தது.பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகே இந்த அறிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிந்தது என ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்துள்ளார்.