தமிழ்நாடு

சாதி மறுப்புத் திருமணம் செய்தோரைப் பாதுகாக்க புதிய திட்டம்

webteam

காதல் திருமணம் செய்தோரைப் பாதுகாக்க நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை அச்சுறுத்தல், பயமுறுத்துதல், தீங்கு விளைவித்தல் மற்றும் ஆணவக் கொலைகள் செய்தல் போன்றவற்றில் இருந்து பாதுகாத்திட உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு மதுரை மாநகர காவல் துணை ஆணையர், மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் செயல்படுகிறது.

மதுரை மாநகர ஆணையர் அறிவுரைப்படி சமுதாயத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெற காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவும், இந்த புகாரினை விசாரணை செய்ய காவல் ஆய்வாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரைத் தெரிவிக்க தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 0452 2346302 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.