தமிழ்நாடு

பெரம்பலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

பெரம்பலூர்: மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

Sinekadhara

பெரம்பலூரில் தொடர்மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்களை பாதுகாப்பாக தங்கவைக்க சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக ஆணையர் குமரிமன்னன் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் இரவு முதல் தற்போது வரை பரவலாக மழைபெய்து வருகிறது. தொடர்மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் நேரில் ஆய்வு செய்தார். அண்ணாநகர், அரணாரை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வுசெய்த நகராட்சி ஆணையர், அங்கிருந்தவர்களை சிறப்பு முகாம்களில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் அருகில் உள்ள நகராட்சி குளத்தை பார்வையிட்ட அவர், நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைத்துள்ளது பற்றி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், பெரம்பலூர் நகராட்சிப் பகுதிகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைக்க 5 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். மேலும் தேவைப்பட்டால் பள்ளிக்கட்டடங்களில் பொதுமக்களை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.