தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் என்று அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. அதை கட்டுபடுத்தவும் மக்களின் பயணத்தினை எளிதாக்கும் வகையிலும் அரசு சார்பிலேயே சிறப்பு பேருந்துகள், ரயில்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. இதன்காரணமாக ஆம்னி பேருந்துகள், விமானநிலையங்கள் என்று அனைத்திலும் பயண கட்டணம் அதிகரித்துள்ளது. இருப்பினும் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் இதனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். மேலும் அரசு பேருந்துகளையே அதிக அளவு மக்கள் நம்பியுள்ளதால் அரசு பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் மூலமாக ஒரே நாளில் 2,17,030 பேர் பயணித்துள்ளனர் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வழக்கமான 2,100 பேருந்துகளுடன் பொங்கல் பண்டிகையை ஒட்டி 1,260 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளன.
சொந்த ஊர்களுக்கு செல்ல இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதிலும் மதுரையை பொறுத்தவரை மதுரையில் இருந்து சென்னைக்கு 365 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வசதிக்காக 24 மணி நேரமும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் விமானநிலையத்தில் இருந்து தாம்பரம் வரை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலை சரி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.