மின்சார ரயில் புதியதலைமுறை
தமிழ்நாடு

சென்னை மின்சார ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்!

PT WEB

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை நாள்தோறும் சுமார் 2 லட்சம் பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அப்படியான நிலையில் தென்னக ரயில்வேயின் 55 மின்சார ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இது குறித்து பயணிகளின் கருத்தை நாம் கேட்டப்பொழுது,

தயானந்த் கிருஷ்ணன், சிட்லபாக்கம்

"ரயில்களை ரத்து செய்தால், அலுவலகம் செல்லும் நேரத்தில் தொடர்ந்து பேருந்துகளை அதிகப்படியாக இயக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

ஜெயசீலன், ரயில் பயணி

"ரயில் சேவை ரத்தானதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக வாய்ப்புள்ளது. பேருந்து சேவையை அதிகப்படுத்தினால்தான் ஏழை மக்கள் பாதிப்படையாமல் இருப்பார்கள்"

கிருஷ்ணராஜ், காஞ்சிபுரம்

"பேருந்தை விட ரயில் வசதியாக உள்ளது. ஆகவே முடிந்தவரை பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்"

என்றனர்.

அதே போல் மறுமார்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கும் செல்லும் ரயில்களும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு இயக்கப்பட்ட மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயிலும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை ரத்து செய்யப்படுகிறது.

மேலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. உடன் கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே இரவு இயக்கப்பட்ட மின்சார ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில்களும் ரத்தாகின்றன.

train

இதையடுத்து பயணிகள் வசதிக்காக

  • சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. காலை 9.30 மணியில் இருந்து இரவு 11.59 மணி வரைஇந்த சிறப்பு மின்சார ரயில்கள் இயங்கும்.

  • மறுமார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.20 மணியில் இருந்து, இரவு 12.45 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

  • இதே போல் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே காலை 10.45 மணி முதல், இரவு 11.55 மணி வரையும், மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 10 மணி முதல், இரவு 11 மணி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று நாகர்கோவில் அந்தியோதயா, செங்கோட்டை - தாம்பரம் பல்லவன், வைகை, மலைக்கோட்டை உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஜூலை 31ஆம் தேதி வரை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.